ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை - வைகோ காட்டமான விமர்சனம்!
Vaiko Say About Tamilnadu Tamilakam
“தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார்.
இந்நிலையில், "தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி தமிழகம் என்று அழைக்க சொல்வதற்கு ஆளுநர் ரவிக்கு எந்த அருகதையும் இல்லை” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆர்.என்.ரவிக்கு எந்த அருகதையும் இல்லை. அதிகார ஆணவம் தலைக்கேறிய நிலையில், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கவில்லை.
மாறாக, எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆர்.என்.ரவிக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறு இவர் அறிந்திருப்பாரா?
1967 இல் பேரறிஞர் அண்ணா முதல்வர் ஆனவுடன், 1967 ஜூலை 18 ஆம் தேதி, சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினார். இச்சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவர் இசைவினைப் பெற்று, 1969 ஜனவரி 14 பொங்கல் திருநாளில் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டப்பெற்று, நடைமுறைக்கு வந்தது.
‘தமிழ்நாடு’ என்று தொலைநோக்கோடு பேரறிஞர் அண்ணா சூட்டியப் பெயர் தமிழ் இலக்கியங்களிலே இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றால், தமிழ் மொழியை நாடு; தமிழரை நாடு; தமிழ்ப் பண்பாட்டை நாடு என்று பொருள்படும். இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் ரத்த நாளங்களில் கலந்திருக்கின்ற தமிழ் உணர்வுதான் ‘தமிழ்நாடு’ என்று மலர்ந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க.வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு’ பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள்" என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Vaiko Say About Tamilnadu Tamilakam