வன்னியர் 10.5% உள்ஒதுக்கீடு வழக்கு இன்று மீண்டும் விசாரணை.!  - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் கேவியட் மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த 14, 15 தேதிகளில் நடைபெற்ற விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில், "சட்டநாதன், அம்பாசங்கர் ஆணையங்கள் பரிந்துரை செய்துள்ளதுபடி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு உள் ஒதுக்கீட்டை வழங்கலாம். 

இந்த விவகாரத்தில் அனைத்து தரவுகளும் சட்டரீதியாக இருப்பதால்தான் மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வன்னியர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வில்லை. மாறாக எம்பிசி பிரிவுக்கான 20 சதவீதத்தில் தான் இந்த உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே இதில் எந்த விதி மீறலும் இல்லை" என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைத்து சட்ட விதிகள், கமிஷனின் பரிந்துரைகள் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதனை எதையும் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. வன்னியர் சமூகத்தை பொருத்தமட்டில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிகப் பெரிய அளவில் மக்கள்தொகை உள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதில் எந்த சட்ட முறைகேடும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவிக்கையில், "வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால் அது எம் பி சி பிரிவில் உள்ள மற்ற சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இந்த வன்னியர் உள்ஒதுக்கீடு என்பது தேர்தல் அடிப்படையாக வைத்துக் கொண்டு வரப்பட்டது என்பதால், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதுபோன்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அல்லது குடியரசுத் தலைவர் தான் அனுமதிக்க முடியும். இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது" என்று வாதிட்டார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில், "வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanniyar reservation case Supreme Court Hearing Today Feb


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->