கார்த்திகை தீபத்தின் போது 2000 பேர் மட்டுமே மலை ஏற அனுமதி!
2000 people are allowed to climb thiruvannamalai
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவ காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு தீபத்திருவிழா வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி முதல் துர்க்கை அம்மன் உற்சவத்துடன் துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதி முன் உள்ள தங்கக்கொடி மரத்தில் நவம்பர் 27ஆம் தேதி காலை கொடியேற்றப்பட்டதும், பஞ்ச மூர்த்திகளின் பத்து நாள் உற்சவ மாட வீதி உலா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டம் மற்றும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கோயில் வளாகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என கருதுவதால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவின் ஏழாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் வலம் வரும் 5 தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாததால் மரதேர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்து தரச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கார்த்திகை தீப திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவின் படி கார்த்திகை தீபம் அன்று அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இவர்களுக்கான அனுமதி சீட்டு என்பது திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணி வரை வழங்கப்படும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் வீர்பிரதீப் சிங், அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அசோக் குமார் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
English Summary
2000 people are allowed to climb thiruvannamalai