தனது 93-வது வயதில் முக்தியடைந்த ஆதினம்.! சோகத்தில் பக்தர்கள்
dharmapuram adheenam passed away
மயிலாடுதுறை : நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் இன்று (டிச.,4) பிற்பகல் தனது 93 வயதில் முக்தியடைந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி பரிபூரணம் அடைந்தார்.
தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்த இவர், வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
dharmapuram adheenam passed away