தினம் ஒரு திருத்தலம்... வித்யாரம்பம்... மஞ்சள் பிரசாதம்.!!
gnana saraswati temple
அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த கோயில் எங்கு உள்ளது :
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தில் பஸாரா என்னும் ஊரில் அருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
ருள்மிகு ஞான சரஸ்வதி திருக்கோயிலின் கருவறையில் மூலவரான ஞான சரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி ஆகியவற்றுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள்.
இத்திருக்கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையும்போது சூர்யேஸ்வர சுவாமி சிவலிங்க ரூபத்தில் காட்சியளிக்கிறார். இந்த சிவலிங்கத்தின் மீது வருடம் முழுவதும் சூரியனின் ஒளி விழுவதால் இவர் சூர்யேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
அருள்மிகு ஞான சரஸ்வதி ஆலயத்தை சுற்றி இந்திரன், சூரியன், வியாசர், வால்மீகி, விஷ்ணு, விநாயகர், புத்ர, சிவன் ஆகிய பெயர்களில் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.
வேறென்ன சிறப்பு :
அருள்மிகு ஞான சரஸ்வதி கோயிலில் வியாசர், வால்மீகி ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளது.
மூலவரான ஞான சரஸ்வதி தேவி சன்னதியின் அருகிலேயே மகாலட்சுமியும் காட்சி தருவது மிகச்சிறப்பு.
மகா காளிக்கும் ஆலய பிரகாரத்தில் தனித்தனி சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.
என்னென்ன திருவிழாக்கள் :
சரஸ்வதி பூஜை, விஜயதசமி தினங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர்.
நவராத்திரி, வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
என்னென்ன பிரார்த்தனைகள் :
மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதியின் மீதிருக்கும் மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இப்பிரசாதத்தை சாப்பிடுவதால் கல்வி, கலைகளில் சிறக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தைகள் கல்வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபடலாம்.
என்னென்ன நேர்த்திக்கடன்கள் :
வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் ஞான சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வெண்பட்டு அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.