காவல் தெய்வம் மதுரை வீரன்.. ஏன் இவ்வளவு சிறப்பு? எப்படி வழிபடலாம்?
god madurai veeran
மதுரை வீரன் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வீரத்திற்கும், காதலுக்கும் அடையாளமாக இருக்கிறார். கருப்பனார் மற்றும் ஐயனார் போலவே மதுரை வீரனும் பரவலாக எல்லோரும் வணங்கப்படும் கடவுளாக இருக்கிறார்.
மதுரை வீரன் வழிபாடு பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரை வீரனை பலர் குலதெய்வமாகவும் கொண்டுள்ளனர். மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான கோவில்களில் இவர்களுக்கென தனிச்சன்னதி காணப்படுகிறது. மதுரை வீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே காட்சியளிக்கின்றனர்.
வரலாறு :
திருச்சி பகுதியை ஆட்சி செய்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள். இந்த சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த பெண் குடில் அமைத்து ஒரு மாதம் வரை காவலில் வைக்க வேண்டும். அப்போது பொம்மியின் தந்தை உடல்நலம் பாதிப்படைந்தது. அதனால் காவல் பொறுப்பை மதுரை வீரன் ஏற்கிறார்.
பொம்மி, மதுரை வீரனின் அழகு மற்றும் வீரத்தை கண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார். இந்த விஷயம் பொம்மியின் தந்தைக்கு தெரிந்தவுடன், பொம்மையா நாயக்கரின் மகன் பெரும்படையுடன் மதுரை வீரனை எதிர்க்கிறார். ஆனால், மதுரை வீரன் இப்படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றி கொள்கிறார்.
அன்றைக்கு கள்வர்களால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. அவர்களை அடக்கமுடியாமல் ராஜ்ஜியங்கள் மிரண்டு இருந்தன. இதனை அறிந்த மதுரை திருமலை நாயக்கர், மதுரை வீரனை பயன்படுத்தி மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்களின் அட்டுழியத்தை அழித்து மதுரை மக்களை பாதுகாத்தார்.
அதனாலேயே தென்மாவட்டங்களில் மதுரை வீரனை அனைத்து மக்களும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மதுரை வீரன் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததால் காவல் தெய்வங்களோடு ஒருவராகிவிட்டார்.
உருவ அமைப்பு :
மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி இருவருக்கும் நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. மேலும் நெற்றியில் சந்தனப் பொட்டும், ஓங்கிய திருவாளுடனும், முறுக்கிய மீசையுடனும் காட்சியளிப்பார்.
வழிபாடு :
மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிபடுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு.
பூஜைக்கு முன் நமக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தையும் மறந்து மதுரை வீரனை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் பூஜையை துவங்க வேண்டும்.