குரு பகவான் தன் அதிசார பெயர்ச்சியின் காரணமாக தற்போதுள்ள தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்கிறார். இந்த நிகழ்வு மார்ச் 30 முதல் மே 14 வரை நடக்கிறது. அதன் பின் தன் வக்கிர நிலையால் மீண்டும் தன் பழைய நிலையான தனுசு ராசிக்கு மே 15 முதல் ஜூன் 29 வரை செல்வார்.கிட்டத்தட்ட 92 நாட்கள் அதிசார பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் மகர ராசியில் இருந்து அனைத்து ராசிகளுக்கும் பலன்களை தருவார். அதுமட்டுமல்லாமல் சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். மகரத்திலிருந்து எல்லா ராசிகளுக்கும் குருவின் பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்...
மேஷம் :
குரு பகவான் இந்த அதிசார பெயர்ச்சியால் உங்கள் ராசிக்கு 10ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு லாபத்தை தருவார். குரு மகரத்தில் நீசமாக இருந்தாலும் அங்கு நீச்ச பங்க ராஜ யோகம் அடைவதால் உத்தியோகத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். உடல் ஆரோக்கிய பிரச்னைகள் நீங்கி நலம் உண்டாகும்.
குருவின் 3ம் பார்வையாக சுப விரய செலவுகளான வண்டி வாங்குதல், முதலீடு, திருமணம் உள்ளிட்டவை நடக்கக் கூடும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும்.
ரிஷபம் :
ரிஷப ராசியினருக்கு சிறப்பான காலத்தை இந்த அதிசார குரு பெயர்ச்சி ஏற்படுத்த உள்ளது. உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் குருவும். குருவுக்கு 5ம் இடத்தில் உங்கள் ராசியும் அமைந்துள்ளது.
குருவின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது யோகத்தையும் பாக்கியங்களையும் தரவல்லது. தொழில்,வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புது முயற்சிக்கு சாதக பலன் தரும். எந்த விஷயத்திலும் நேர்மறையாக அணுகுவீர்கள்.
உங்களுக்கு பூர்வ புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதும், முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் இதுவரை சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் இந்த காலத்தில் விலகும். அதனால் திருமணம் உள்ளிட்ட முயற்சியை தொடங்க விரைவில் வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அது குழந்தை பாக்கியத்தால் கூட அமையலாம். தீராத கடன்கள் தீர்க்கக் கூடிய காலம். எதிர்பார்த்த லாபமும், பண வரவும் இருக்கும். உடல் நலம் மேம்படும்.
மிதுனம் :
மிதுன ராசிக்கு எட்டாம் இடத்தில் சனியும், குருவும் அமர்ந்துள்ளதால் சற்று சிக்கலான நிலையி காலம் கழியும். குரு நீச்சம் பெற்றாலும், அவர் கெடுதல் தர மாட்டார். அவர் அமர்ந்துள்ள இடத்திலிருந்து 3ம் பார்வையாக குரு விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் அமையலாம்.
அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் மிக நல்ல பலன்களை தான் மிதுன ராசியினர் பெறுவார்கள். நிதி நிலை சீராக இருக்கும்.
கடக ராசி :
கடக ராசிக்கு 7ல் குரு அமந்திருப்பதும், குருவுக்கு 7ம் இடத்தில் உங்கள் ராசி அமைந்திருப்பது மிக சிறப்பானது. இதனை குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த மூன்று மாதம் சிறப்பான பலன்கள் பெறுவீர்கள். சனியின் கெடுபலன் குறையும். எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதை வெற்றியாக முடிக்காமல் ஓய மாட்டீர்கள்.
அதிர்ஷ்டத்தை அளிக்கும் குருவாக இருப்பதால் உங்களின் முயற்சிகளுக்கு கை மேல் லாபம் கிடைக்கும். உங்கள் செயலில் தன்னம்பிக்கையும், வேகமும் இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும் சிறப்பான காலமாக அமையும். இந்த காலத்தை பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு 6ம் இடத்தில் குரு அமர்வது சற்று யோகம் தான். குருவின் 2ம் பார்வையால் நல்ல பண வரவு இருக்கும். அதே சமயம் செலவும் சற்று இருக்கத் தான் செய்யும். அதனால் கடன் வாங்கும் சூழல் இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்க எல்லா பிரச்னைகளிலிருந்தும் தப்பிப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை. எதிரிகள் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். எந்த பிரச்னை வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்பட காரியங்கள் வெற்றி அடையும்.
கன்னி :
அதிசார குரு பெயர்ச்சியால் மிக அதிர்ஷ்டத்தைல் பெறக் கூடிய ராசியாக கன்னி ராசி உள்ளது. கன்னி ராசிக்கு 5ம் இடத்தில் குரு அமர்ந்துள்ளார். அதே போல் குருவின் 9ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது சிறப்பான யோகம் தரும். அனைத்து பாக்கியங்களும் ஏற்படக் கூடிய அருமையான காலம்.
குரு 5ல் அமர்வது யோகம் தான். உங்களின் திறன் கூடும். எந்த ஒரு செயலையும் மிக ஆர்வமாக செய்வீர்கள். மாணவர்களின் கல்வி மேம்படும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகக் கூடும். தொழில், கல்வி சார்ந்த பயணங்கள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒருசெயலையும் தைரியமாக கையாள அனைத்திலும் வெற்றி ஏற்படும்.
துலாம் :
அதிசார குரு பெயர்ச்சியால் குரு உங்கள் ராசியிலிருந்து 4ம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதனால் உங்கள் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஒரு புதிய பாதையை தேடக் கூடிய காலமாக இருக்கும். புதிய முயற்சிகளால் உங்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புக்கள் அமையும்.பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் முடிந்தளவு ஆடம்பர செல்வுகளை கட்டுப்படுத்துவது நல்லது. முயற்சிக்கேற்ற நல்ல பலன்களை தரக் கூடியதாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு 3ம் இடத்தில் குரு சஞ்சரிக்க உள்ளார். உங்கள் ராசிக்கு 7 மற்றும் 11ம் இடத்தை குரு பார்ப்பர். இதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சு வார்த்தை வெற்றி அடையும். லாபத்தை தரக் கூடிய அமைப்பு உங்களின் தொழில், உத்தியோகத்தில் இருக்கும்.
இதுவரை இருந்த உடல் ஆரோக்கிய பிரச்னைகளில் நலம் உண்டாகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். அது சேமிப்பாக அல்லது சுப விரயமாக வாய்ப்புள்ளது. இதுவரை வராமல் இருந்த கடன் திரும்பி வரும்.
தனுசு :
தனுசு ராசியில் சஞ்சரித்த குரு தற்போது மகர ராசிக்கு செல்கிறார். இதனால் நல்ல பலன்களைத் தான் தனுசு ராசியினர் பெற உள்ளனர். உங்களின் குடும்ப வாழ்க்கையில் இனிமை கூடும். தன வரவுக்கான கதவுகள் திறக்கும். வேலை தேடுபவர்களுக்கும். வேறு வேலைக்கு மாற திட்டமிடுபவர்களுக்கும் இது பொன்னான வாய்ப்பை தரும். ராசி 10ம் இடத்தை குரு 9ம் பார்வையாக பார்ப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நாம் நினைத்த லாபம் கிடைக்கும்.
6ம் இடத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவர். போட்டித் தேர்வில் வெற்றி பெற சிறப்பான காலம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் :
மகர ராசியில் குரு சஞ்சரிப்பதால், சற்று நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும். ஜென்ம சனி நடக்கும் நிலையில் குருவின் வரவு ஆறுதலை தரக் கூடியதாக இருக்கும். குருவின் பார்வையால் உங்கள் தொழில், வேலையில் ஏற்றத்தைப் பார்ப்பீர்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இதுவரை இருந்த நிலைமையை விட குருவின் அதிசார பெயர்ச்சியால் மகர ராசியினர் நல்ல பலன்களை அதிகம் அனுபவிப்பார்கள். திருமணம், குழந்தைப் பேறு போன்ற முக்கிய விஷயங்கள் நடக்கக் கூடும்.
கும்பம்:
குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ல் அமர்ந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அது நல்ல செலவாக அதாவது முதலீடு, வண்டி வாகனம் வாங்குவதாக அல்லது தொழில், வியாபார முதலீடு என சுபத்தன்மையாக இருக்கும். அதனால் அடுத்து லாபம் கிடைக்கக் கூடும். இதுவரை கடன் அடைக்க முடியாத நிலை இருந்தால் தற்போது கடனை அடைக்க வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியையும். லாபத்தையும் தரும். கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீர்கள்.
மீனம் :
குரு உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் அமர்ந்திருப்பதோடு, குருவின் 3ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது நல்ல யோகமும், லாபமும் தர வல்லது. உங்கள் முன்னேற்றத்திற்கு நிதி பற்றாக்குறை இருக்காது. கடன் கொடுக்க பலரும் முன்வருவர். கடன் வாங்கும் முன் அதை கட்ட முடியுமா என்பதை யோசித்து பெறுவது நல்லது. அதே போல் கடன் கொடுப்பதும் வேண்டாம்.
எந்த காரியத்திலும் தைரியத்துடன் களமிறங்கி வெற்றி கொடி நாட்டுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் தீர்வதற்கான உன்னத காலமாக இருக்கும்.
English Summary
Guru peyarchi palangal for 12 zodiac signs