ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாமா? ஏற்றக்கூடாதா?
is right to lamp by boys
வீட்டில் பொதுவாக பெண்கள் தீபம் ஏற்றுவது சிறந்தது. பல பேர் வீட்டில் ஆண்கள், விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும்போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு.
அதற்காக ஆண்கள் தீபம் ஏற்றக்கூடாது என்ற நியமம் எதுவுமில்லை. பெண்கள் வீட்டில் இல்லாதபோதோ அல்லது பெண்களுக்கு முக்கியமான வேலை இருக்கும்பட்சத்தில் தாராளமாக ஆண்கள் கடவுளுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபடலாம். அதில் எந்தவொரு தவறும் இல்லை.
வீட்டு பெண்களால் விளக்கு ஏற்ற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, கட்டாயம் பெண்கள் தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை ஆண்கள் கையில் கொடுக்கக்கூடாது. குழந்தைகளிடம் கூட ஆண், பெண் வித்தியாசமின்றி இருபாலருக்கும் வீட்டில் விளக்கு ஏற்ற கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால், அப்படி விளக்கு ஏற்றும்போது சில விதிமுறைகளை ஆண்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த விதிமுறைகள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்...
வீட்டில் விளக்கு ஏற்றும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல் சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும்.
வேட்டி அல்லது பேண்ட் அணிந்து கொண்டு தீபம் ஏற்றலாமே தவிர, கைலி (லுங்கி) அணிந்து கொண்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக்கூடாதோ, அதேபோல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்றக்கூடாது.
நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்கள் மார்பிலும் பூசி கொள்ளுங்கள். முடிந்தால் இருகைகளிலும் பூசி கொண்டு தீபத்தை ஏற்றுங்கள்.
ஒரு முறை இதை பின்பற்றி தீபமேற்றும் ஆண்கள், கட்டாயமாக அவர்களே இதனை கடைபிடிப்பார்கள். அந்த அளவிற்கு மன அமைதி கிடைக்கும்.
இதேபோல் ஆண்கள் குளித்தவுடன் ஈர தலையோடும், ஈர துண்டோடும் தீபம் ஏற்றக்கூடாது.
ஆண்கள் கிழக்கு பார்த்தவாறு தான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
ஆண்கள் ஏற்றிய தீபத்தை குளிர வைக்கக்கூடாது. தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிருவதில் எந்தவொரு தவறும் இல்லை.
தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக தீபத்தின் முன்பு ஒரு பூவோ அல்லது ஒரு ரூபாய் நாணயமோ அல்லது சிறிதளவு அரிசியோ என இவை மூன்றையும் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
இந்த மூன்று பொருளில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் விளக்கின் முன்பாக வைத்து, விளக்கை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கை ஏற்றிய அடுத்த நாள் பூவாக இருந்தால் காய்ந்த பூவை எடுத்து விட்டு நல்ல பூவை வைத்துக் கொள்ளலாம். அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை எடுத்து சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருந்தால் அதை உங்கள் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம்.