தினம் ஒரு திருத்தலம்... ஒரே கல்லில் பிரம்மாண்டம்... திறந்த வெளியில் ஶ்ரீஆஞ்சநேயர்...!!
namakkal sree anjaneyar temple
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் :
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
கோயில் எங்கு உள்ளது:
அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
ஸ்ரீ சீதா தேவியை இலங்கையில் தேடுவதற்காக கடலைக் கடக்கும் முன் ஸ்ரீ ஆஞ்சநேயர் எடுத்த விஸ்வரூபத்தின் சின்னமாக இந்த மூர்த்தி அமைந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி நாமக்கல் ஆஞ்சநேயர் தான்.
இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரின் முகம் மிகவும் அழகாக, தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.
நாமக்கல்லில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியுடனும் இருக்கிறார். ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.
வேறென்ன சிறப்பு:
லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றுக்கொண்டிருக்கிறார்.
திருவிழாக்கள் :
தமிழ் வருடப்பிறப்பு, தெலுங்கு வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி 18, ஆவணி பவுத்திர உற்சவம், ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள், நவராத்திரி உற்சவம், அனுமன் ஜெயந்தி, மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி, அறுவடைத் திருநாள், வருட உற்சவம் ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
பிரார்த்தனைகள் :
மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் 'ஸ்ரீராமஜெயம்" மற்றும் 'ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி" என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள்.
அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுதல், எலுமிச்சை பழம் மாலை சாற்றுதல், துளசி மாலை சாற்றுதல், வடை மாலை சாற்றுதல், பூ மாலை சாற்றுதல் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. தங்கத்தேர் இழுத்தல், வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.
English Summary
namakkal sree anjaneyar temple