குடும்பத்தோடு அருள் பாலிக்கும் பெருமாள்...!
perumal with his family
திவ்யதேசக் கோவில்கள் 108-ல் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் மட்டும் தான் பெருமாள் குடும்பசகிதமாக அருள்பாலிக்கிறார். ப்ரஹ்மாண்ட புராணத்தில் இக்கோயிலின் வரலாறு கூறப்பட்டுள்ளது. சுமதி ராஜன், ஏழுமலை திருவேங்கடத்தானிடம் சென்று, பெருமாளை அர்ஜுனனுக்கு (பார்த்தனுக்கு) சாரதியாகவும் கீதாச்சார்யானாகவும் வந்த கோலத்தில் காண வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.
ஏழுமலையான், சுமதி ராஜனின் கனவில் அருள் பாலித்து, அவனை ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்த்ற்கு (தற்போதைய திருவல்லிக்கேணி) செல்லும்படியும், தான் அங்கு வந்து அவன் விரும்பிய கோலத்தில் தரிசனம் தருவதாகக் கூறினார்.
அதே சமயம் வேதவியாசர் தனது சிஷ்யர் ஆத்ரேயரிடம் ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்திற்குச் சென்று தவம் புரியுமாறு கூறி, அவரிடம் ஒரு திவ்ய மங்கள விக்ரகத்தையும் கொடுத்தார். அந்த பெருமாள் விக்ரகம் வலது கையில் சங்குடனும் இடது கை ஞான முத்ராவுடன் பெருமாளின் திருவடிகளை நோக்கியவாறும் இருந்தது. இடது கையில் உள்ள ஞான முத்ரா பெருமாளின் திருவடிகளை நோக்கியவாறு இருப்பதன் முக்கியத்துவத்தை பகவத் கீதையின் 18-வது அத்தியாத்தின் 66-வது ஸ்லோகம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ப்ருந்தாரண்ய ஷேத்திரத்தில் சுமதி ராஜனும், ஆத்ரேய ரிஷியும் சந்தித்துக்கொண்டு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டு இருவரும் விக்ரகத்தைப் பூஜித்துவந்தனர். பெருமாளும் அவர்கள் இருவருக்கும் பார்த்தசாரதியாக தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது.
விக்கிரகங்களின் நிலைகள்
கர்ப்பக்கிரகத்தில் பிரதான மூர்த்தியாக, கீதாசார்யன் கோலத்தில் உள்ள பெருமாள் ஸ்ரீ வேங்கடக்ருஷ்ண ஸ்வாமியாகப் பூஜிக்கப்படுகிறார். பெருமாளின் வலது புறத்தில் ஸ்ரீ ருக்மணி தாயாரும், இடது புறத்தில் பகவான் கிருஷ்ணனின் தம்பியான சாத்யகியும் அருள் பாலிக்கின்றனர். ஸ்ரீ ருக்மணி தாயாரின் வலது புறத்தில் பகவான் கிருஷ்ணனின் அண்ணனான பலராமர் வட திசை நோக்கி அருள் பாலிக்கின்றார். கர்ப்பக்கிரகத்தின் வடக்குப் பக்கத்தில் பகவான் கிருஷ்ணனின் புதல்வன் ப்ரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் தென் திசை நோக்கி அருள் பாலிக்கின்றனர்.
பெருமாளைச் சுற்றி அவரது குடும்பத்தினர் நின்றுகொண்டிருக்கும் நிலைகள், அவர்கள் வாழ்க்கையில் நடைப்பெற்ற ஒரு சம்பவத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. கிருஷ்ணர், ருக்மணி தேவியை மீட்டு (சிசுபாலனோடு நடக்கவிருந்த விவாகத்திலிருந்து) வரும்பொழுது சாத்யகி தேரோட்டியாக இருந்தார். பலராமர், கிருஷ்ணனுக்கு உதவி செய்யும் பொருட்டு, தேரில் கிருஷ்ணனுக்குச் சற்று பின்னே வலது பக்கம் இருந்தார். ருக்மணி தேவியை மீட்ட பிறகு, ருக்மணி தேவி கிருஷ்ணனுக்கும் பலராமருக்கும் நடுவே அடைக்கலம் அடைந்தவாறு தேரில் வந்தார். இந்த நிகழ்வில் அவர்கள் இருந்த நிலையில்தான் இக்கோயிலில் அருள் பாலிக்கின்றனர்.
பிரத்யும்னனும், அநிருத்தனும் வடக்குப் பக்கம் சற்றுத் தொலைவில் தென் திசை பார்த்து இருப்பது, குடும்பத்தில் பெரியோர்களுக்குச் சிறியவர்கள் வழங்க வேண்டிய மரியாதையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தியான ஸ்ரீ பார்த்தசாரதியின் முகத்தில் தழும்புகள் காணப்படுகின்றன. இத்தழும்புகள், அர்ஜுனனை நோக்கி பிதாமகர் பீஷ்மர் எய்திய அம்புகளால் ஏற்பட்டதைக் குறிக்கிறது.
ஸ்ரீ பார்த்தசாரதியின் சன்னதிக்கு வலதுபுறம், கிழக்கு நோக்கி வேதவல்லி தாயாராக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் உள்ள குளத்தில் மஹரிஷி ப்ருகுவிற்கு, ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரே, ஸ்ரீ வேதவல்லியாக பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தில் ஐந்து கேணிகள் உள்ளதாகவும், எப்பொழுதும் அல்லி பூக்கள் நிறைந்து இருந்தது என கூறப்படுகிறது. இதனாலேயே இந்த ஷேத்திரம் திருவல்லிக்கேணி என வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ரங்கநாதருக்கும், ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுக்கும் (சீதா பிராட்டி மற்றும் மூன்று தம்பிகளுடன்), ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கும்,ஸ்ரீ கஜேந்திர வரதருக்கும்,ஸ்ரீ ஆண்டாளுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.