சூரிய பகவானை போற்றும் ரத சப்தமி விழா 2025: திருமலையில் விழா கோலம்..!
Ratha Saptami Festival 2025 in honor of Lord Sun
சூரிய பகவானின் அவதார தினமான ரத சப்தமி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் கோவில்களில் சூரிய பிரபை வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.
இந்த ரத்த சம்தமி நாளில் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில்இன்று ரத சப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ரத சப்தமி மினி பிரமோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
ரத சப்தமி நாளில் சூரிய பிரபை வாகனம், சின்னசேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திர பிரபை வாகனம் என, காலை முதல் இரவு வரை 07 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ரத சப்தமி வாகன சேவைகளை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்த வகையில் வெயிலின் தாக்கம் தற்போது கடுமையாக இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி நான்கு மாட வீதிகளின் இருபுறமும் உள்ள கேலரிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவை தொடர்ந்து வழங்குவதற்காக சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்கு டீ, காபி, பால், மோர், குடிநீர், சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை மற்றும் பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் நடக்கும் வாகன சேவைகளை திருமலையில் எங்கிருந்து வேண்டுமானாலும் கண்டு தரிசிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் எல்இடி(LED) திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானத்தில் மாட வீதிகளில் ரங்கோலி வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தரையில் வெள்ளை நிற குளிரூட்டும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரத சப்தமி வழிபாடு (Ratha Sapthami)
தை அமாவாசைக்கு பிறகு வரும் ஏழாவது நாள் சப்தமி. இந்த நாள் சூரிய பகவான் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி என்று போற்றுகிறார்கள். சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுக கூட்டுகிறான் என்று சாஸ்திரம்.
ரத சப்தமி நாளில் சூரியன் அவதரித்ததாக கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுவது விசேஷ பலனை தரும்.
இந்த நாளில் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும்.
அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள். தியானம், யோகாவை தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Ratha Saptami Festival 2025 in honor of Lord Sun