தினம் ஒரு திருத்தலம்... கடவில் ஸ்ரீ மகாலட்சுமி... முதலை வாகனம்..!!
shri ashtalakshmi temple
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டம் பள்ளிப்புரம் என்னும் ஊரில் அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
கேரளா மாநிலத்திலே இங்கு தான் மகாலட்சுமிக்கு என தனிக்கோயில் அமைந்துள்ளது.
ஆயிரம் வருடம் பழமையான இந்த அம்மன் 'கடவில் ஸ்ரீ மகாலட்சுமி" என அழைக்கப்படுகிறாள்.
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயிலில் மூலவரான அம்மன் கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு காட்சியளிக்கிறாள்.
இவள் அஷ்ட ஐஸ்வரியங்களையும் கொடுக்கும் மகா சக்தியாக முன் கைகளில் நெல்கதிர், கிளியையும் பின் கைகளில் சங்கு, சக்கரமும் வைத்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
மகாலட்சுமியின் வாகனமான முதலையை கல்லால் வடித்து கோயில் கர்ப்பகிரகத்தின் அருகில் வைத்திருப்பது சிறப்பு.
வேறென்ன சிறப்பு :
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயிலின் சுற்றுப் பகுதியில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, க்ஷேத்திர பாலகர்கள் போன்றவர்களுக்கும் சன்னதிகள் காணப்படுகின்றன.
சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்து இறங்கிய குளத்தில் உள்ள நீரை அருந்தி விட்டு முகம், கை, கால்களை கழுவி மகாலட்சுமியை தரிசித்தால் நாராயணனையும் சேர்த்து தம்பதி சமேதராக தரிசித்த பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதிதேவதை இருக்கும். இத்தலத்தின் நுழைவு வாயிலில் ஒன்பது கிரகங்களுக்குமான அதிதேவதைகளும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது இத்திருக்கோயிலின் தனி சிறப்பாகும்.
திருவிழாக்கள் :
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயிலில் நவராத்திரி, தை மகரசங்கராந்தி, தை புனர்பூச நட்சத்திரத்தில் பிரதிஷ்டை தின விழா, மாசி மகாசிவராத்திரி மற்றும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை, மார்கழியில் 12 நாள் 'களப பூஜை" போன்றவைகள் நடைபெறுகின்றன.
பிரார்த்தனைகள் :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் நாராயணனையும், மகாலட்சுமியையும் தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நேர்த்திக்கடன்கள் :
அருள்மிகு மலையாள மகாலட்சுமி திருக்கோயிலில் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறியவுடன், தாங்கள் விரும்பிய பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றார்கள்.