ஏன் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது?
sorgavasal open 2020
சொர்க்கவாசல் திறப்பு..
வைகுண்ட ஏகாதசி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் அன்றுதான் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று. பெருமாளை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் வாசலின் முன்பு நின்று தவமாக காத்து இருப்பார்கள். எதற்கு இந்த சொர்க்கவாசல் திறப்பு வைத்தார்கள்? ஏன் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்று தெரியுமா?
சொர்க்கவாசல் பிறந்த கதை :
ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணுபகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
'பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.
'எம்பெருமானே! தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவங்களை யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டனர் அசுர சகோதரர்கள்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி... விரதமுறை :
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
ஏகாதசி விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும்.
முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து சாப்பிடலாம்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம்பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.
துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என்கிறார்கள். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.