99 லட்சம் கடவுள்கள் கொண்ட அதிசய சிவன் கோவில்; ஒரே இரவில் செய்யப்பட்ட சிலைகளா..? - Seithipunal
Seithipunal


நமது பாரத பூமி இந்தியா பண்பாடு, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பெயர் விடயங்களுக்கு உலக புகழ் வாய்ந்தது. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊர்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் வாழ்பவர்கள் தங்களின் பல வகையான பாரம்பரியங்களை பின்பற்றி வருகின்றனர். 

அதிலும் ஆன்மீக சார்ந்த காலாச்சார விழுமியங்களை இந்த நவீன் அக்காலத்தில் பின் பற்றி உலாகி நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அந்தவகையில் நமது இந்தியாவில் பலருக்கும் தெரியாத ஒரு வித்தியாசமான கோவில் குறித்து இந்த பதிவின் மூலம்  நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் பசுமை வளம் பொதிந்துள்ள சிறிய மாநிலமான திரிபுராவில் எண்ணற்ற அதிசயங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் ஒன்றுதான் உனகோடி. புண்ணியத் தலமாகப் போற்றப்படும் இந்த ஊரின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.

திரிபுரா பகுதியின் ரகுநந்தன் மலைகளில் அமைந்துள்ள உனகோடி கோவில் தான் இந்த அதிசய கோவில்.இந்த கோவிலில் 99,99,999 கடவுள்கள் மற்றும் சிலைகளைக் கொண்டுள்ளன. உனகோடி என்பது பெங்காலியில் ஒரு கோடிக்கும் குறைவானதைக் குறிக்கிறது என்று பொருள்.

இந்த கோவிலை வடகிழக்கு அங்கோர் வாட் என்று அழைக்கிறார்கள். இந்த கோவிலின் சிறப்பே இங்கு ஒரு கோடி கடவுள்களின் சிலைகள் உள்ளமை தான். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கும் போது சிவ பெருமான் ஒரு நாள் காசிக்கு சென்றபோது 99,99,999 தெய்வங்களுடன் சென்றுள்ளார். 

ஆனால், பிரயாணத்தின் போது இரகுநந்தன் மலையில் தங்கிய அவர்கள் காலையில் எழுந்திருக்கவில்லையாம். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான்  மற்ற 99,99,999 தெய்வங்களுக்கு சாபம் கொடுத்ததாகவும், அதனால் அவர்கள் கல்லாக மாறியதாகவும் புராணங்கள் கூறுகிறது. 

ஆனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உனகோடி பற்றி வேறு ஒரு கதையை கூறுகிறார்கள். அதாவது, பார்வதியின் பக்தர் கல்லு குமாரை கைலாசத்திற்கு அழைத்துச் செல்ல பார்வதி விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, கல்லு குமாருக்கு ஒரே இரவில் ஒரு கோடி சிவன் சிலைகளை உருவாக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாம். ஆனால், விடியற்காலையில் பார்க்கும் போது சிலைகள் ஒரு கோடிக்கும் குறைவாகவே இருந்ததால் அவரை உனகோடியில் விட்டு சென்றிருக்கிறார் சிவன் என்றும் கூறுகிறார்கள்.

ஆக, புராணங்கள் சொல்வது ஒருபுறம், அங்குள்ள மக்கள் சொல்லும் கதைகள் ஒருபுறம் இருந்தாலும்,இந்த உனகோடிக்கு என சில சிறப்பு அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது. கற்பனைக்கு எட்டாத உனகோடியில் பாறையில் செதுக்கப்பட்ட உருவங்கள், சிவன் தலை மற்றும் பிரம்மாண்டமான விநாயகர் உருவங்கள் என்பன இன்னும் ஆச்சர்யங்களை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கின்றது.

இந்த உனகோடீஸ்வர கால பைரவா என்று அழைக்கப்படும் சிவன் உருவம் 10 அடி உயரமுள்ள எம்பிராய்டரி தலை, ஆடை உட்பட சுமார் 30 அடி உயரம் கொண்டுள்ளது. பார்க்கவே பிரமாண்டமாகி இருக்கும். அத்துடன், இந்த சிவனின் தலை அலங்காரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. இது தவிர தவிர காளையின் மூன்று பெரிய படங்கள் நிலத்தில் பாதி புதைந்த நிலையில் இருக்கும். பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும். 

இந்த இடத்தில் நுழைந்தவுடன் சிற்ப உருவங்கள், ஒருவித அதிர்ச்சியைத்தான் தருகின்றன. தலையும் பெரிய காதுகளும் புத்தரின் முகத்தை நினைவுறுத்துகின்றன. ஆனால் சற்று மேலே பார்க்கும்போது நெற்றிக்கண், பெரிய காதணிகள், பழங்குடிகளைப் போலச் சற்றே பகட்டான மீசையும் அகன்ற பல்லிளிப்புமாக அவை தோற்றம் கொடுக்கின்றன. பத்தடி நீளமுள்ள மணி மகுடம் இந்து சமய அடையாளத்தைக் கொண்டிருக்கிறது.

பௌத்த மரபில் வந்த திரிபுர மலை வாழ் பழங்குடியினரிடயே ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் பிரவேசித்து நிரந்தரமாகக் குடியேறிவிட்டன. பௌத்த மரபின் அடையாளங்கள் இந்தச் சிற்பக் கலையில் இழையோடுவதையும் நாம் காணலாம். சற்று மேலே பார்த்தால் நிறைய உருவங்கள் சிறியதும் பெரியதுமாய் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் புன்சிரிப்புடன் தலையில் இறகுகளான கிரீடத்துடன் உள்ள இரு பிரம்மாண்டமான பெண் உருவங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

கீழே இறங்கும்போது ஓடை ஒன்று அருவியாக விழுகிறது. அந்தப் பாறையில் கணபதி உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. அருகிலேயே நின்ற நிலையில் கணேசரின் உருவங்கள். இவற்றுக்குச் சற்றே இடப்பக்கத்தில் இன்னும் நேர்த்தியுடன் விஷ்ணுவின் உருவம். இவ்விடத்தில் நடுநாயகமாக இருக்கும் சிவனின் பெயர் உணகொடீச்வர பைரவர். இங்கிருக்கும் மற்ற தெய்வங்கள் துர்க்கை, கங்கை, கௌரி, வீரபத்திரர், சீதா ராமர், கின்னரர், பார்வதி தபஸ், மற்றும் பல. சதுர்முக லிங்கங்கள், கல்யாண சுந்தர மூர்த்தி என மேலும் பல சிலைகளும் உள்ளன.

இன்னொரு சிறப்பம்சம் ஜடாமுடியுடன் உள்ளே நுழைந்தவுடன் முதலில் இருக்கும் சிவனின் தலை. இதில் மேலே தலையிலிருந்து ஓர் ஓட்டை. அதன் வழியாகத் தண்ணீர் வழிந்தோடுகிறது. இது சிவனின் தலையிலிருந்து கங்கை வழிந்தோடுவதைக் குறிப்பதுபோல் அமைந்துள்ளது. நரசிம்மர், ஹரன் கௌரி, ஹரிஹரன், அனுமன், பஞ்சானனன் உருவங்களும் இங்கே உள்ளன.

பழைய கோவிலின் சிதிலமடைந்த பாகங்கள் ஆங்காங்கே தென்படு கின்றன. இது ஒரு திருத்தலமாகவே இருந்திருக்கிறது என்று இதை வைத்து ஊகிக்கலாம். இங்கு வர மேற்கொள்ளும் யாத்திரை புனித யாத்திரையாகக் கருதப்படுகிறது. திரும்பி வரும்போது சிலைகளைப் பார்த்துக்கொண்டே பிரமிப்புடன் நடக்கும்போது பறவைகளின் ஒலி கேட்கிறது. பிறகு நிசப்தம் சூழ்கிறது. இந்த ஒலியும் நிசப்தமும் இந்தச் சிலைகளின் தரிசனமும் சேர்ந்து தியான உணர்வைத் தருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The amazing Shiva temple with 99 lakh idols of gods


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->