டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கபில் தேவ் சாதனையை முறியடித்த அஷ்வின்.!
Ashwin new record
டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவின் சாதனையை முறியடித்த அஷ்வின் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 100 ஆவது டெஸ்டில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி தொடக்கம் முதலே ரன் சேர்க்க தடுமாறியது. இலங்கை அணி தரப்பில், அதிகபட்சமாக நிசாங்கா 61 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆனது.
இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சிலும், 60 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இலங்கை வீரர் சரித் அசலாங்காவின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 435 விக்கெட்கள் கைப்பற்றி இருந்த கபில் தேவின் சாதனையை முறியடித்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் 436 விக்கட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் 2-வது இடத்துக்கு அஷ்வின் முன்னேறினார்.
இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.