INDvsPAK | வெறித்தனமான ரசிகர்களின் அதிர்ச்சி பிளான்! இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
ICC WC 2023 INDvsPAK match Fans Plan
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இந்திய, பாகிஸ்தான் ரசிகர்களை மட்டும் அல்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி, குஜராத் மாநிலம் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ள லீக்காட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தை காண்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் ஆட்டத்தை காண்பதற்காக ஒரு வாரம் அகமதாபாத் நகரில் முகாமிடவும் ரசிகர்கள் கள மிறங்கியுள்ளனர். ஏற்கனவே ஆட்டம் நடைபெறும் அந்த வாரத்தில் அகமதாபாத் நகரில் உள்ள தனியார் ஹோட்டல்கள் நிரம்பிவிட்ட நிலையில், விமான டிக்கெட் விலையும் எகிரி உள்ளது.
இந்நிலையில், அகமதாபாத் மைதானத்தில் ஒட்டி உள்ள மருத்துவமனைகளை கிரிக்கெட் ரசிகர்கள் குறிவைத்து உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
முழு உடல் பரிசோதனை செய்வதாக கூறி, இரண்டு, மூன்று நாள் வரை மருத்துவமனையில் படுக்கை வசதி கேட்டு மருத்துவமனைகளை ரசிகர்கள் நாடி உள்ளதாக வெளியான அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களில் தற்போது 72 ஆயிரம் வரை ஒரு நாளைக்கு வசூல் செய்யப்படுவதாகவும், அவ்வளவு பணம் கொடுத்தாலும் தற்போது ரூம் கிடைப்பதில்லை என்றும், எனவே மருத்துவமனைகளில் தங்கி, மருத்துவ சேவையை பெறுவது போல, இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை காண ரசிகர்கள் இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியாவது இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நியாயம்தான். ஆனால் இப்படி மருத்துவ சேவையை பெறுவதாக கூறி, மருத்துவமனையில் டேரா போட்டு ஆட்டத்தை காண முயல்வது, கிரிக்கெட் மீதான வெறித்தனத்தை காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படியோ... ரசிகர்களின் இந்த செயலால், நோயாளிகளுக்கும், மருத்துவ சேவையை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.
English Summary
ICC WC 2023 INDvsPAK match Fans Plan