கண்ணீர்விட்டு அழுத இந்திய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர்! ஆறுதல் சொல்லி தேற்றிய சக வீராங்கனை!
indian women's team captain harmanpreet kaur tears
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வந்த வேகப்பந்து வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் நிலையில், இந்த போட்டியுடன் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
39 வயதான ஜூலான் கோஸ்வாமி டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் 44 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில் 253 விக்கெட்டுக்களையும், 20 ஓவர் போட்டிகளில் 56 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருக்கிறார். ஒருநாள் போட்டி வரலாற்றில் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். அதேபோல ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை ஆகவும் அவர் இருக்கிறார். மேலும் அவர் 1924 ரன்களையும் அடித்திருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஐசிசி யின் ஆண்டு விருதையும் அவர் பெற்றிருக்கிறார். இந்திய அரசின் விளையாட்டு துறையில் வழங்கப்படும் அர்ஜுனா விருது, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று இறுதி போட்டிக்கு முன்னதாக அவரை கௌரவிக்கும் விதமாக, டாஸ் போடும்பொழுது இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர், ஜூலான் கோஸ்வாமியை கூடவே அழைத்துச் சென்று அவரை டாஸ் கேட்கச் செய்தார். அதேபோல ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அணி கூட்டத்தில், பிரியாவிடை அளித்து பேசும் பொழுது கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் கண்ணீர் விட்டு அழுதார். அவரைக் கட்டி அணைத்த ஜூலான் கோஸ்வாமி ஆறுதல் படுத்தி தேற்றினார்.
தற்போதைய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர், ஜூலான் கோஸ்வாமி கேப்டனாக இருக்கும் போது சர்வதேச போட்டிகளில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களாக விளையாடும் ஜூலான் கோஸ்வாமிக்கு உலகின் பல வீரர்களும் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
indian women's team captain harmanpreet kaur tears