18 வயதில் உலக செஸ் சாம்பியன்.. குகேஷ்க்கு எலான் மஸ்க் வாழ்த்து!
World Chess Champion at the age of 18 Elon Musk congratulates Gukesh
உலக செஸ் சாம்பியனான குகேஷ்க்கு,டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில், 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேசுக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உலக செஸ் சாம்பியனான குகேஷ் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "18வது @ 18!" என்று பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
World Chess Champion at the age of 18 Elon Musk congratulates Gukesh