அகவிலைப்படி விவகாரம் - போராட்டத்தை தீவிரப்படுத்த போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் முடிவு.!
transport corporation pensioners decided protest for increase basic fare
தமிழக போக்குவரத்து கழகங்களில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட போதும் ஓய்வூதியதாரர்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை.
இது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போதும் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளில் அகவிலைப்பபடி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தர விட்ட போதும், அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துவதாக ஓய்வூதியதாரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கர்சன் தெரிவித்ததாவது:- "போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தொடர்ந்து மேல் முறையீடு செய்கிறது. இதனால் எங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் ரூ.3 லட்சத்துக்கும் மேல் இழந்துள்ளோம். மின் வாரியத்திலும் இதே நிலை நீடிக்கிறது.
நாங்கள் அரசின் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடி உள்ளோம். அரசு அறக்கட்டளை மூலமாகவே ஓய்வூதியம் வழங்குவோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஓய்வூதியத்தை அரசு பொறுப்பேற்று வழங்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இது தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய நாளை மறுநாள் (22-ந்தேதி) சென்னையில் மைய குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
transport corporation pensioners decided protest for increase basic fare