மூட்டை மூட்டையாக.. எல்லாமே 2000 ரூபாய் நோட்டுகள்.. ஆடியோ ஆதாரம் இருக்கு.. பகிர் கிளப்பும் ஐ.டி அதிகாரிகள்..!!
Accused of assaulting IT officials to hide bundles of Rs2000 notes
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்ற போது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் கூடிய திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்கள் பயணித்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையை தடுத்த திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் 25க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே திமுகவினர் 50 பேர் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட நடவடிக்கை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்களான கொங்கு மெஸ் மணி மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூட்டத்தை கூட்டி அதிகாரிகளை தாக்க தொலைபேசியில் பேசிய ஆடியோ எங்களிடம் உள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் நிரம்பிய குறைந்தது நான்கு கோணிப்பைகளையாவது சோதனை நடத்த இருந்த இடத்திலிருந்து அகற்ற எங்கள் கவனத்தை திசை திருப்பம் நோக்கில் திமுகவினர் பிரச்சனை செய்துள்ளனர் என வருமானவரித் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலைகள் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சச்சிதானந்தம் வீட்டில் இருந்து 2.1 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை 2000 ரூபாய் நோட்டுகள். சச்சிதானந்தம் ஒரு டாஸ்மாக் ஒப்பந்ததாரர். இவர் டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு மதுபானம் சப்ளை செய்யும் போக்குவரத்து ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Accused of assaulting IT officials to hide bundles of Rs2000 notes