மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம்! அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.!
Administration training for ward members
சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான நிருவாகப் பயிற்சி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான நிருவாகப் பயிற்சி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே. என். நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.
இந்தப் பயிற்சி முகாமில் மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள், அறிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 13ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பும், 18ஆம் தேதி பேரூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சென்னை மாநகரின் மேயராக தனக்கு உண்டான அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினார். அந்தச் சமயத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் இதனை ஒரு பதவியாக கருதாமல் தங்களுடைய பொறுப்பாக எண்ணி நாள்தோறும் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களால் நிவர்த்தி செய்ய முடியாத மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும். ஏனென்றால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை நாள்தோறும் அறிந்து செயலாற்றி வருகிறீர்கள்.
உங்கள் பகுதியிலே மக்களின் பிரச்சினைகளை அணுகி தீர்வு செய்தால் மக்களிடம் உங்களிடம் மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.
மக்களின் அன்றாட பிரச்சினைகளை மாமன்றத்திலே எடுத்துரைத்து அதற்கான தீர்வினை காண வேண்டும்.
திட்டப் பணிகளுக்கு தேவையான நிதியினை தமிழ்நாடு அரசிடமிருந்து நிச்சயம் இந்த மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் நானும் இணைந்து பெற்று தருவோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச அரங்கில் உயர்த்துவதற்காக அவரும் தனிக் கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறார்.
எனவே, மாமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் உறுதுணையாக இருந்து உங்களுடைய பணியினை சிறப்பாக செய்ய வேண்டும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் சட்டவிதிகள் குறித்தும், பெருநகர சென்னை மாநகராட்சி மன்றம் மற்றும் உறுப்பினர்களின் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் குறித்தும், நிலைக்குழுக்கள், வார்டு குழுக்களின் பொறுப்புகள் குறித்தும், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர். பிரியா, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர்கள், தலைமைப் பொறியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், மன்றச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Administration training for ward members