#சற்றுமுன் | எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், "பேய் அரசாண்டாள் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு இணங்க, விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து, தமிழ் நாட்டில் காவல் துறையும், உளவுத் துறையும் உண்மையில் இருக்கிறதா? இயங்குகிறதா ? என்று மக்கள் சந்தேகப்படும் அளவிற்கு நிலைமை உள்ளது.

முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தெருவில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் ஃபோட்டோ ஷூட் விளம்பரங்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு கொடுக்கவில்லை. தமிழ் நாட்டில் கூலிப் படைகளின் ஆதிக்கமும், ரவுடியிசமும் நாளுக்குநாள் பெருகி வருவதால், மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

விடியா திமுக ஆட்சியில், எண்ணிலடங்கா கொலை, கொள்ளைகளின் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த கூலிப் படை கொலைகள் தமிழ் நாட்டை உலுக்கின. அதேபோல், கடந்த 3.9.2023 அன்று திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், பல்லடம் பகுதியில், தன் வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்திய ரவுடிகளை கேள்வி கேட்ட காரணத்திற்காக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கோரப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. 

இந்தக் கொடுஞ்சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களிலேயே, சென்னிமலை பகுதியில் வயதான தம்பதிகள் இரவோடு இரவாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. 

இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் உளவுத் துறையின், காவல் துறையின் முழுமையான தோல்வியை பறை சாற்றுகிறது.

இதுபோன்ற கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப் படை ரவுடிகள், கஞ்சா மற்றும் பிற போதைப் பொருட்களைப் பயன்படுத்தி இருப்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்படுகிறது. ஆனால், போதைப் பொருட்களின் தடையில்லா புழக்கத்தை ஆளும் விடியா திமுக அரசு கண்டுகொள்வதே இல்லை.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் முறைகேடுகள் தொடர்வதாகவும்; அரசின் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பல இடங்களில் பார்கள் இன்றும் இயங்கிக்கொண்டிருப்பதாகவும்; இவை சமூக விரோதிகளின் புகலிடங்களாக மாறி, மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருப்பதாகவும்; இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


அதே போல், விடியா திமுக ஆட்சியில், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டுகொள்ளாமலும்; போதைப் பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமலும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்காமலும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமலும், மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசைக் கண்டித்தும்; 

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 23.9.2023 - சனிக் கிழமை காலை 10.30 மணியளவில், பல்லடம், வீரபாண்டி பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.



இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன், M.L.A., அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.S.M. ஆனந்தன், M.L.A., அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்ட மக்கள் நலனை முன்வைத்தும், விடியா திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்" என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Announce Palladam Protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->