கனிமொழி கைதுக்கு கூட வருத்தப்படாத ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்காக ஏன் இப்படி செய்கிறார் - அதிமுக தரப்பு பேட்டி!
ADMK ex Minister meet RNRavi for senthilbalaji case
கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட வருத்தப்படாத முதல்வர் ஸ்டாலின், ஏன் செந்தில் பாலாஜிக்காக இறங்கி செல்கிறார் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என் ரவியை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவிக்கையில், "அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் இருந்து வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட 24 மணி நேரம் கடந்தும் அவர் அமைச்சராக தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. இது தொடர்ந்தால், மக்கள் இந்திய ஜனநாயகத்தின் மீதும், ஒரு அரசாங்கத்தின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையின் மீது அவ நம்பிக்கை ஏற்படுத்தும்.
ஆளுநர் ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் மேலும் அவர் மீதான வழக்கை முறையாக நடத்த விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட உடனேயே அவரை அமைச்சரவையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கி இருக்க வேண்டும்.
ஆனால், முதலமைச்சரும், கூட்டணி கட்சி தலைவர்களும், செந்தில் பாலாஜி ஏதோ நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தியாகியை போல சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காப்பது தவறான செயல். கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட வருத்தப்படாத முதல்வர், ஏன் செந்தில் பாலாஜிக்காக இறங்கி செல்கிறார்" என்று தெரிவித்தனர்.
English Summary
ADMK ex Minister meet RNRavi for senthilbalaji case