வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்! சபாநாயகர் அறிவிப்பு.!
Agricultural budget
தமிழக பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டநிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உறையாற்றினார். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் துறை ரீதியிலான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்ப்ட்டது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பாக செல்வபெருந்தகை, பாமக சார்பாக ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநயகர் அப்பாவு, நாளை தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாகவும், இதனை தொடர்ந்து 21-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
வருகிற 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வருகிற 24 ஆம் தேதி நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க இருப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும், இறுதி நாளன்று அமைச்சர்களின் பதிலுரையையும் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.