தமிழக வெற்றிக் கழகத்தின் 02-ஆம் ஆண்டு விழா; விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக தகவல்..!
TVK 2nd anniversary tomorrow
தமிழக வெற்றிக் கழகத்தின் 02-ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் சொகுசு விடுதி ஒன்றில் நாளை (26-02-2025) காலை 7.45 மணிக்கு தொடங்க இருக்கிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் ஆண்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமாகத்தான் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. குறித்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், தமிழக வெற்றிக் கழத்தின் அரசியல் ஆலோசனை குழுவில் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த கூட்டம் முழுக்க, முழுக்க 2026 தேர்தல் வியூகத்தை மேற்கொள்வதற்கான கூட்டமாகவே அமைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்கூட்டத்தில், தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள 95 மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், துணை தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என 600 பேர் பங்கேற்கவுள்ளனர். நிர்வாகிகளுக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இவர்கள், மக்களை எவ்வாறு சந்திக்க வேண்டும், எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும், மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டு மக்கள் சேவை ஆற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கவுள்ளனர்.அதனை தொடர்ந்து, கட்சியின் தலைவர் விஜய் கூட்டத்தில் பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால், கூட்டத்திற்கு நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவு அட்டை இல்லாதவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த கூட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக நிர்வாகிகள் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு வரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் 02-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முதலில் பொது விழாவாக திறந்த வெளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கட்சியின் முக்கிய அரசியல் ரகசியங்கள் பேசும் நிகழ்வுக்கு பொதுமேடை சரியாக இருக்காது என்பதால் கடைசி நேரத்தில் ஓட்டலில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக 02-ஆம் ஆண்டு தொடக்க விழா பணிகளை மேற்கொள்ள 18 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சி தலைமை வெளியிட்டது.
இந்த குழுவில், சி.சூரியநாராயணன் (செங்கல்பட்டு), மோகன் ராஜா (செங்கல்பட்டு), எம்.எஸ்.பாலாஜி (செங்கல்பட்டு), வி.நரேந்திரன் (செங்கல்பட்டு), தீனா (திருப்போரூர்), தியாகு (திருப்போரூர்), ராஜேஷ் (திருப்போரூர்), ரமேஷ் (திருப்போரூர்), சுசி கணேஷ் (திருப்போரூர்), .தேவா (திருப்போரூர்), எஸ்.விஸ்வநாதன் (திருப்போரூர்), ஹேமா (திருப்போரூர்), விஜயதேவி (திருப்போரூர்), புஷ்ப ராஜ் (திருப்போரூர்), பவானி (திருப்போரூர்), கவுதம் (திருப்போரூர்), ஜான் ரமேஷ் (மதுராந்தகம்), கண்ணன் (திருப்போரூர்) ஆகிய 18 பேர் இடம்பெற்று உள்ளனர்.
மேலும், த.வெ.க. ஆண்டு விழாவுக்கு 03 ஆயிரம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு சைவ, அசைவ விருந்தும் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கே ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் செலவு செய்யபப்படுவதாக கூறப்படுகிறது. ஆக, உணவுக்கு மட்டும் கட்சி ரூ.90 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TVK 2nd anniversary tomorrow