இது தான் உண்மை.. "இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்".. அண்ணாமலையின் அட்வைஸ்..!!
Annamalai advises DMK on Coimbatore blasts
கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரே கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவன் பலியானார். மேலும் கோவையில் போலீசார் மற்றும் என்ஐஎ விசாரணையில் நாசகார சதித்திட்டத்துடன் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த இருந்தது தெரியவந்தது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கின. ஜமேஷா முபின் கூட்டாளிகளாக கருதப்படும் 6 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களையும் கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கானது பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்றும், தீவிரவாத தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நிகழ்ந்தது தீவிரவாத தாக்குதல் என்றும் தமிழக காவல்துறையும் உளவுத்துறையும் தோல்வியடைந்துள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக தமிழக காவல்துறைக்கு தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டுகொள்ளாததால் இத்தகைய நிகழ்வு அரங்கேற்றப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் கொராசன் மாகாணத்தில் உள்ள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. திமுக உறுப்பினர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டு தங்களின் "சிலிண்டர் குண்டுவெடிப்பு" என்ற கோட்பாட்டை கைவிடுவார்கள் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். ஆரம்ப முதலே இது தீவிரவாத தாக்குதல் என அண்ணாமலை கூறிவந்த நிலையில் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Annamalai advises DMK on Coimbatore blasts