கட்டாத தடுப்பணைக்கு பாராட்டு விழா - சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்.!
appreciation for unbuilt barrage in erode
"ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அவரக்கரை பள்ளத்தில் மழை நீரைத் தேக்கி வைப்பதற்காக ரூ.20.46 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையை பார்வையிட பெருந்துறை பாஜக நிர்வாகிகள், சென்றபோது, அங்கு தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, அவரக்கரை பள்ளத்தில் கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்டதாகவும், தடுப்பணையை புகைப்படம் எடுத்தவர் மற்றும் அதற்கான பெயர் பலகையை எழுதியவர்களுக்கு பில் தொகை வழங்கியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தடுப்பணைக் கட்டபட்ட சம்பவம் குறித்து ஈரோடு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராயல் சரவணன் பேசியதாவது:- “கூத்தம்பாளையம் ஊராட்சி அவரக்கரை பள்ளத்தில், தடுப்பணை கட்டியதாக பொய்யான கணக்குகளைக் காட்டி, ரூ. 20.46 லட்சம் மோசடி நடந்துள்ளது. அந்த இடத்தில் தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை. இது தொடர்பாக கேட்டதற்கு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், உரிய ஆவணங்களை வழங்கியுள்ளனர். இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம்.
மத்திய அரசின் நிதியில் இப்படி முறைகேடு நடந்துள்ளதால், கூத்தம்பாளையம் ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்காது என்பதால், மத்திய அரசு விசாரணை கோரி, பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். எங்களது குற்றச்சாட்டைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தடுப்பணையை சற்று தள்ளி கட்டியுள்ளதாக பொய்யான தகவலைத் தெரிவித்து வருகின்றனர்” என்றுத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
appreciation for unbuilt barrage in erode