அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் அரசியலா..?? தென்கால் பாசன விவசாயிகளின் உரிமை பறிப்பு.. ஜல்லிக்கட்டு போட்டியை அரசே நடத்த முடிவு..!!
Avaniyapuram Jallikattu was decided to be conducted by the TNgovt
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தென்கால் பாசன விவசாயிகள் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் ஒரு சிலர் விழா நடத்துவதில் தங்களையும் சேர்க்க வேண்டும் என பிரச்சனை செய்து வருகின்றனர்.
அவர்களையும் விழா கமிட்டியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமைச்சர் மூர்த்தி அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு தென்கால் பாசன விவசாயிகள் ஒத்துவரவில்லை. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தென்கால் பாசன விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். விழா குழுவில் சம்பந்தப்பட்ட நபர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு அமைச்சர் மூர்த்தி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்காள் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே கண்ணன் கூறியதாவது "மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் அல்லாத மூன்று பேரை விழா கமிட்டியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமைச்சர் கூறினார்.
அதற்கு நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. விவசாயிகளாக இருப்பவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் விழா கமிட்டியில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் விவசாயிகள் அல்லாத நபர்களை விழா கமிட்டியில் சேர்த்துக் கொள்ள முடியாது. அவர்களை வேண்டுமானால் ஆலோசனைக் குழுவில் சேர்த்துக் கொள்கிறோம் என தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவித்தோம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த பொழுது தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் மூலம் பணம் வசூலித்து அந்த வழக்கை உச்சநீதிமன்றம் வரை நடத்தினோம். ஆனால் தற்பொழுது தனிநபர்களை விழா கமிட்டியில் சேர்க்குமாறு அரசு தரப்பு பரிந்துரை செய்கிறது.
அதற்கு நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்திடம் பொறுப்பை ஒப்படையுங்கள், அப்படி இல்லை என்றால் தமிழக அரசே இந்த விழாவை எடுத்து நடத்திக் கொள்ளட்டும் என கூறினோம். பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை எடுத்து நடத்தும் என முடிவு எடுத்துள்ளனர்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தென்காள் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே கண்ணன் தெரிவித்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கொடி அசைத்து ண தொடங்கி வைத்தார். ஆனால் தற்பொழுது மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் அதிகமாக காணப்படுவதால் ஜல்லிக்கட்டு போட்டியிலும் தங்களது அரசியல் அதிகாரத்தை அமைச்சர்கள் செலுத்த முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனினும் இவர்களின் அதிகார போட்டியால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் நின்றுவிடக் கூடாது என விழா கமிட்டியினர் முணுமுணுக்கின்றனர்.
English Summary
Avaniyapuram Jallikattu was decided to be conducted by the TNgovt