விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூற மறுப்பது, இந்துக்களை அவமதிக்கும் செயல் - பாஜக எம்எல்ஏ கண்டனம்!
BJP MLA Vanathi Condemn to CM Stalin for Vinayaga Chaturti wish issue
பிற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து கூற வேண்டும் என்று, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இன்று விநாயகர் சதுர்த்தி முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகெங்கும் வாழும் இந்துக்கள் தங்கள் வாழ்வின் எந்த செயலையும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுதான் தொடங்குவார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பாலகங்காதர திலகர் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கினார். அன்று தொடங்கிய விநாயகர் ஊர்வலம் நாடெங்கும் பெரும் எழுச்சியோடு நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த எழுச்சியைத் தடுக்க விநாயகர் சதுர்த்தி ஊரவலங்களுக்கு எந்தெந்த வழிகளில் நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ அத்தனையையும் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும் திமுக அரசு செய்து வருகிறது.
வழிபாட்டு உரிமை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டே, அரசியலமைப்புக்கு எதிராக இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கிறது திமுக அரசு இது கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவுக்கு இந்து மதத்தின் மீது, இந்து கடவுள்களின் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், அரசு என்பது அனைவருக்குமானது. திமுக தலைவராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்கலாம். அது அவரது உரிமை.
ஆனால், அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல்.
விநாயகர் சதுர்த்தியில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், முதலமைச்சராக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று, வானதி சீனிவாசன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
BJP MLA Vanathi Condemn to CM Stalin for Vinayaga Chaturti wish issue