இப்படி சொன்னா உங்களை பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் - வானதி சீனிவாசன் பரபரப்பு டிவிட்! - Seithipunal
Seithipunal



காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பொம்மை பிரதமராக இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த 10 ஆண்டுகளும் உண்மையிலேயே அதிகாரம் செலுத்தியது சோனியா காந்தி, ராகுல் காந்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். இந்த ஜனநாயகத்திற்கு நேர் எதிரான பாசிசம் தான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது. இனியும் எதிர்க்கும்.

இதுபோல பாஜகவில் நடக்கிறதா? 1951-ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980-ல் அது பாஜகவை மாறியது தொடங்கி இன்று வரை, பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை யாருக்கும் தெரியாது.

பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தலைவர் பதவிக்கு வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது.

1984-ல் இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு நடைபெற்ற 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய 10 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையை பெறவில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில்கூட காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்தே வருகின்றனர்.

இதற்கு அக்கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதே காரணம். சோனியா குடும்பத்திற்கு அடிமையாக இருக்க பிடிக்காமல் தான், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரத்தில் சரத் பவார், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியையே தோற்கடித்தனர். தனித்து கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற இந்த தலைவர்களால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து சாதிக்க முடியாமல் போனதற்கு ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்கம் தான் காரணம். இதுதான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல். இதைதான் பாஜக எதிர்க்கிறது. இனியும் எதிர்க்கும்.

தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகி இருக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்களையும் வாரிசு அரசியல் பட்டியலில் சேர்த்திருக்கிறார் ராகுல் காந்தி. அவர் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் ஈடுபட்டு அரசியலுக்கு வந்தவர். ராகுல் காந்தியைப் போல பிரதமர் இல்லத்தில் பிறந்தவர் அல்ல. படிப்படியாக உழைத்து தனது திறமையால் பாஜக தேசியத் தலைவர் என்ற உயரத்தை எட்டியிருக்கிறார்.

49 ஆண்டு காலம் திமுக என்ற கட்சியை தனது பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி மறைந்ததும், அவரது மகன் மு.க. ஸ்டாலினிடம் அக்கட்சி சென்று விட்டது. மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத் பவர், உத்தவ் தாக்கரே என்று 'இண்டி' கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளை ஒரு குடும்பத்தினர் தான் கட்டுப்படுத்துகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ அவர்தான் அக்கட்சியின் அடுத்த தலைவராக முடிகிறது. ஆட்சி அமைத்தல் முதலமைச்சராக முடிகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக, எம்.பி.யாக இருந்து, அக்கட்சியின் அதிகாரம் உண்மையிலேயே மல்லிகார்ஜுன கார்கேவிடம் இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. திமுக தலைவராக துரைமுருகனும், முதலமைச்சராக ஆ.ராசாவும் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக, அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், அதற்கு நேர் மாறாக 'கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி' அதாவது 'தந்தை - மகன் - பேரன்' என்று கட்சியை, ஆட்சியை கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அண்ணா காலத்திலிருந்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, உதயநிதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. இந்த அவலத்தை தான் பாஜக எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில், மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக்கி விட்டு, வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து முடிவுகளையும் சோனியா, ராகுல், பிரியங்கா தான் எடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற முக்கிய கூட்டங்களில் சோனியா, ராகுல் பிரியங்கா என்று குடும்பத்தினர் தான் அமர்ந்திருக்கின்றனர். இது போன்ற காட்சியை ஒரு நாளும் பாஜகவில் பார்க்க முடியாது.

முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு கட்சியை, குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அடிமைகளை போல நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாகக் கூறுவது, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போன்றது. பாஜகவை நோக்கி வாரிசு அரசியல் என்று ராகுல் காந்தி வைக்கும் விமர்சனத்தை பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi Srinivasan condiment to DMK Congress Rahul


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->