சென்னையில் இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
bomb threat Chennai School TamilNadu
சென்னையில் இன்று இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 1.55 மணிக்கு தனியார் பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாப்பூர் லஸ் கார்னர் வித்யா மந்திர் மற்றும் பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் செட்டிநாடு வித்யாஷ்ரம் ஆகிய இரு பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் காலை முதல் சோதனை ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அது புரளி என தெரியவந்துள்ளது.
மேலும், இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் சென்னை பரங்கி மலையிலும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. சிறப்பு படை போலீசார் மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யார் என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இதேபோல், தொடக்கத்தில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்தது. மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டதில் அதுவும் போலி மிரட்டல் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் விடும் நபர்களை கண்டறிந்து, தக்க தண்டனை வழங்கினால் மட்டுமே இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
bomb threat Chennai School TamilNadu