வினாத்தாள் கசிந்ததாக வதந்தி பரப்பினால்.. எச்சரிக்கும் சி.பி.எஸ்.இ..!
cbse office warning not published fake news
நாடு முழுவதும் கடந்த 15-ந்தேதி சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, இந்த சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவு என்றும், வினாத்தாளை பெற்றுத் தருவதாகவும் யூ டியூப், பேஸ்புக், எக்ஸ் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் சில சமூக விரோத சக்திகள் வதந்தி பரப்பி வருகின்றன. இந்தத் தகவல் சி.பி.எஸ்.இ. கவனத்துக்கும் வந்துள்ளது.

இதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தேவையற்ற பீதியை உண்டாக்கும் நோக்கத்தில் பரப்பப்படுகின்றன. ஆகவே, மாணவர்களும், பெற்றோரும் விழிப்புடன் இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை, மாணவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், சி.பி.எஸ்.இ. விதிகளின்படியும், இந்திய தண்டனை சட்டத்தின்படியும் அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஆகவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறும், பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்த வேண்டும். இது, தேர்வு பணிகளை சீர்குலைக்கும் செயல். பெற்றோர், மாணவர்கள், பள்ளிகள் என்று அனைத்து தரப்பினரும் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
cbse office warning not published fake news