ஓராண்டு சாதனை.. சென்னை கவுன்சிலர்கள் "ரூ.70 கோடி நிதியில் ரூ.34 கோடி" மட்டுமே செலவு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!
Chennai councilors Rs34crore spent out of Rs70crore fund
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் கடந்த 2016 முதல் 2022 பிப்ரவரி மாதம் வரை கவுன்சிலர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. அப்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் முதல் உதவி பொறியாளர்கள் வரை சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது முதல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 175க்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். கவுன்சிலர்கள் பொறுப்பேற்றதை அடுத்து நடந்த கவுன்சிலர் கூட்டங்களில் தங்கள் வார்டு மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து 30 லட்சம் ரூபாயில் இருந்து 35 லட்சம் ரூபாயாக, கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டது. அந்த நிதியும் போதவில்லை என கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி ரூ.70 கோடி வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ66.32 கோடி மதிப்பில் 660 பணிகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
அந்த நிலையில் ரூ. 58.35 கோடி மதிப்பில் 559 பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்ட நிலையில் ரூ.34.80 கோடி மதிப்பில் 406 பணிகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ3.17 கோடி மதிப்பில் 46 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
மண்டல வாரியாக கவுன்சிலர்களால் முன்னெடுத்த திட்டம் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகை பின்வருமாறு:
திருவொற்றியூர் - 58 – 3.68 கோடி
மணலி - 25 – 2.64 கோடி
மாதவரம் - 39 – 2.75 கோடி
தண்டையார்பேட்டை - 9 – 73 லட்சம்
ராயபுரம் - 24 – 3.70 கோடி
திரு.வி.க.நகர் - 0 – 0
அம்பத்துார் - 39 – 3.83 கோடி
அண்ணாநகர் - 24 – 1.55 கோடி
தேனாம்பேட்டை - 23 – 1.72 கோடி
கோடம்பாக்கம் - 25 – 2.31 கோடி
வளசரவாக்கம் - 25 – 2.73 கோடி
ஆலந்துார் - 45 – 2.72 கோடி
அடையாறு - 20 – 2.21 கோடி
பெருங்குடி - 22 – 1.88 கோடி
சோழிங்கநல்லுார் - 28 – 2.33 கோடி
மொத்தம் - 406 – 34.80 கோடி மட்டும் செலவழித்துள்ளனர்.
தற்போது 66.32 கோடி ரூபாய்க்கான பணிகளுக்கு அனுமதி அளித்தாலும் திட்ட அறிக்கை தயாரிப்பு மேற்கொள்ளாத நிலையில் தற்போது ரூ.34.80 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022 –2023ம் நிதியாண்டு நிறைவு பெற இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் புதிதாக ஒப்புதல் கோரப்பட்ட என கணக்கிட்டால் 58.35 கோடி ரூபாய்க்கான பணிகள் தான் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மீதம் 11.65 கோடி ரூபாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Chennai councilors Rs34crore spent out of Rs70crore fund