பேச்சுவார்த்தை தோல்வி || சென்னைக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல்! நாளை முதல் தொடர் போராட்டம்!
Chennai water truck strike from tomorrow
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அரசு அதிகாரிகள் அனுமதிக்காததால் நாளை முதல் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம், துரைப்பாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் பதித்து போக்குவரத்திற்கு இடையூறாக தண்ணீர் லாரிகள் செயல்பட்டதாகவும், கோவிலம்பாக்கத்தில் தண்ணி லாரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்ததாலும் அரசு அதிகாரிகள் தனியார் தண்ணி லாரிகள் தண்ணீர் எடுக்கும் நிலையங்களில் மின் இணைப்பை துண்டித்து, தண்ணீர் நிரப்பும் குழாய்களை பறிமுதல் செய்தனர்.
இதனை கண்டித்து நாளை முதல் காலவரையின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சுப நந்தினி தலைமையில் லாரி உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கோரப்பட்டது.
அதுகுறித்து பின்னர் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்த லாரி உரிமையாளர்கள் அறிவித்தபடி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். நாளை முதல் திட்டமிட்டபடி தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 4 மாவட்டங்களில் மருத்துவமனைகள், உணவகங்கள், தனியார் நிறுவனங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
English Summary
Chennai water truck strike from tomorrow