சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-4 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!
ChennaiHC 3to4 judges are confirmed Corona virus positive
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடும் போது மட்டும் முக கவசத்தை நீக்கிக் கொள்ளலாம். மற்ற சமயங்களில் நீதிமன்ற வளாகங்களில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற விசாரணை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏன் கூட்டம் கூட்டமாக நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வருகிறார்கள்?
நீதிமன்றங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி வாதிடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 500-ஐ தாண்டியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ChennaiHC 3to4 judges are confirmed Corona virus positive