ரத்தகாயத்துடன் சினிமா லைட்மேன் உடல் மீட்பு.! திட்டமிட்ட சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.!
cinima light man ganesan died in chennai vadapazhani
சென்னை சூளைமேடு ஸ்ரீராம்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். சினிமா துறையில் லைட் மேனாக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், சூளைமேடு பெரியார் பாதையில் சாலையோரத்தில் வாயில் ரத்தம் வந்த நிலையில் கணேசன் காயங்களுடன் இறந்து கிடப்பதாக வடபழனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, வடபழனி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கணேசனை யாராவது அடித்துக் கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோல், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை விருகம்பாக்கம், இளங்கோ நகர் அனெக்ஸ் பகுதியில் சாலையோரத்தில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
cinima light man ganesan died in chennai vadapazhani