மீண்டும் பணி வழங்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
CITU workers protest demanding reinstatement of jobs
திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், மீண்டும் பணி வழங்கக் கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கும் போலந்து நாட்டின் கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பர்னிச்சர் மரபொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 73 நிரந்தர தொழிலாளர்களை பர்னிச்சர் விற்பனை ஆகவில்லை எனக்கூறி நிர்வாகம் கடந்தாண்டு மார்ச் மாதம் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்துள்ளது.
பின்னர் நிர்வாகம் பணியில் இருந்து நிறுத்தி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.3.50 லட்சம் செட்டில்மெண்ட் தொகை அனுப்பி உள்ளதாகக் கூறறப்படுகிறறது. ஆனால், அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொழிலாளர்கள் மீண்டும் தங்களுக்கு பணி அல்லது செட்டில்மெண்ட் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை குறளகத்தில் தொழிலாளர் நல ஆணையத்தில் நிர்வாகம் மீது புகார் கொடுத்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை அருகே தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணிநீக்கம் மற்றும் ஆலை மூடலைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார் .
தொழிற்சாலையிலிருந்து சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட 73 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். தொழிற்சாலையை மூடாமல் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், சங்க நிர்வாகிகள் கணபதி, நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
CITU workers protest demanding reinstatement of jobs