1ஆம் வகுப்பு மாணவி பாலியல் விவகாரம்..  மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் மனு!  - Seithipunal
Seithipunal


1ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல், குற்றவாளிக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தைத் துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம், பொதுநல அமைப்புகள் மனு அளித்தனர்.

புதுச்சேரியில,தனியார் பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்த அப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் மணிகண்டன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்பள்ளி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு எழுத மாற்றுப் பள்ளி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கின் புலன்விசாரணையை தவளக்குப்பம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்ற 17.02.2025 அன்று, தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் தூண்டுதலால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் தவளக்குப்பம், கடலூர் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிகண்டன் அப்பாவி என்றும், அவர் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், பள்ளியை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைத்து மேற்சொன்ன சாலை மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர். 

இது சட்டவிரோதமானது என்பதும், குற்றமிழைத்த ஆசிரியர் மணிகண்டனை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றும் உள்நோக்கத்துடன், வழக்கின் புலன்விசாரணையைத் திசைத் திருப்பும் முயற்சியாகும். இப்போராட்டப்  பின்னணியில் அப்பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் உள்ளனர். போக்சோ சட்ட வழக்கான இவ்வழக்கின் புலன்விசாரணை நிலுவையில் உள்ள போது இதுபோன்று போராட்டம் நடத்துவது வழக்கின் புலன்விசாரணையைப் பாதிக்கும் என்பதோடு, நீதி வழங்கும் முறைக்கே எதிரானது ஆகும். குற்றமிழைத்த ஆசிரியர் மணிகண்டனை போக்சோ வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் போராட்டத்தைத் தூண்டிய அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், போராட்டத்தில் மாணவ, மாணவியர்களை அதுவும் சிறுவர், சிறுமிகளைப் பங்கேற்க செய்த ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிக் கல்வித்துறை மூலம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல் நான்கு மாதங்களாக நடந்து வந்துள்ளதாக மாணவியின் உறவினர்கள் கூறியுள்ளனர். எனவே, இக்குற்றத்திற்குத் துணையாக இருந்துள்ள அப்பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோரையும் மேற்சொன்ன போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்துக் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுபோன்று பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்ட வழக்குகளில் தொடர்புடைய பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 

பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பாதிக்கப்பட்டோர் நிவாரணத் திட்டப்படி (Victim Compensation Scheme) உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டப்படி (Witness Protection Scheme) உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 

பள்ளியின் தாளாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், இவ்வழக்கை நீர்த்துப் போக செய்யும் நோக்கில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் புலன்விசாரணையில் தலையிடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, இவ்வழக்குப் புலன்விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்ற அறிக்கைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு,  குற்றவாளிகளுக்குத் தண்டனைக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நீண்ட காலமாக செயல்படாமல் உள்ள குழந்தைகள் நலக் குழு (Child Welfare Committee) மீண்டும் செயல்படுத்தும் வகையில் தலைவர், உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகள் நலக் குழுவின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Sensitising Programmes) நடத்த வேண்டும்.

மேலும், இம்மனு தலைமைச் செயலர், டி.ஜி.பி., தெற்குப் பகுதி எஸ்.பி. ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Class 1 student sexually assaulted Public interest organizations petition to District Collector


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->