ரூ.5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு: அச்சத்தில் தமிழக மக்கள் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிக்கை!
ADMK Edappadi Palanisami condemn to Union Minister and DMK Govt
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிடில் ரூ.5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய அரசு SSA - சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் வழங்கக்கூடிய பங்கு நிதியினை இந்த ஆண்டு திடீரென்று நிறுத்தியுள்ளது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த தலைவர்களால், குறிப்பாக பேரறிஞர் அண்ணா போன்றவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் மற்றும் சிறப்பு பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அலுவல் மொழிகள் விதி 1976 வகுக்கப்பட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, அம்மாவின் அரசும், தொடர்ந்து இந்த அரசும் கடைபிடித்து வருகிறது.

இத்தகைய அறிவுசார்ந்த முடிவினால்தான் தமிழ் நாட்டில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் பல உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். 'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில 'உலகமயமாக்கல்' மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள்.
ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.
எனவே தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.
மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்று
வலியுறுத்துகிறேன். அதேபோல், மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசின் நிதிப் பங்குடன் நிறைவேற்றும் திட்டங்கள் பல உள்ளன. இவையெல்லாம் அந்தந்த துறைகளில் உள்ள குறியீடுகளை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் மாநில அரசின் பங்கும் உள்ளது. கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறியீடுகளை தமிழ் நாடு தற்போதுள்ள திட்ட முறையிலேயே அடைந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கை, தமிழ் நாட்டில் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, இதற்கு முன்பு ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், தற்போதைய அரசும் சுட்டிக்காட்டி உள்ளன.
இத்தகைய ஆட்சேபனைக்குரிய ஷரத்துக்கள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுடன் உடனடியாக விவாதித்து ஒரு இணக்கமான முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய, இதுபோன்ற முக்கியமான துறைகளில் செயல்படுத்தப்படும் `சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்' போன்றவற்றுக்கான நிதியை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

இதனால், தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த அச்சமும், மத்திய அரசின் மீது வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி
மாற்றிக்கொண்டு, தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷரத்துக்கள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் SSA போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத்தான் தமிழ் நாட்டு மக்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பி உள்ளார்கள் என்பதையும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
ADMK Edappadi Palanisami condemn to Union Minister and DMK Govt