கோவை குண்டு வெடிப்பு: 3 மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!
Coimbatore blast case NIA officials raid 60 places in 3 states
கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் உள்ளனர்.
முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட 9 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மாநில போலீசார் உடன் இணைந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தமிழகத்தை தாண்டி இருக்கக்கூடிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்தான விரிவான தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் மற்ற மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Coimbatore blast case NIA officials raid 60 places in 3 states