மூன்று கோயில்களில் நோட்டமிட்டு ஒத்திகை! ஒற்றை ஓநாய் முறையில் தாக்குதல் நடத்த சதி!
Coimbatore car blast lone wolf style attack
கோவை மாவட்டம் உக்கடம் அருகில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 100 கிலோ வெடி மருந்துகள் ஜேம்ஸா முபின் உறவினர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கை தற்பொழுது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தும் ஒற்றை ஓநாய் முறையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜமேஷா முபினின் நெருங்கிய உறவினர்களான அசாருதீன் மற்றும் அப்சர் கான் ஆகியோர் சங்கமேஸ்வரர், கோனியம்மன், விநாயகர் கோயில்களை நோட்டமிட்டு தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காந்தி பார்க்கில் உள்ள கடைகளில் மூன்று சிலிண்டர்களை வாங்கியுள்ளனர்.
இதே போன்று பழைய மார்க்கெட் பகுதியில் ட்ரம்களை வாங்கி அதனுள் வெடிபொருட்கள், ஆணிகள் உள்ளிட்டவற்றை சேமித்து வாகனத்தில் வைத்து ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாகவே தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிய வருகிறது.
இவர்கள் தாக்குதல் நடத்த ஒற்றை ஓநாய் முறையை பயன்படுத்த முயற்சித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். அதாவது தீவிரவாத சிந்தனை உடையவர்களை ஒன்று திரட்டி தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது ஒற்றை ஓநாய் முறை தாக்குதலாகும். இவர்களுக்கிடையே அமைப்பு ரீதியில் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. உலகில் பல்வேறு நாடுகளில் இத்தகைய ஒற்றை ஓணாய் முறை தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டினர் சதி இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்பொழுது இந்த வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த சதி திட்டம் குறித்த தகவல்கள் விசாரணை முடிவில் தெரியவரும்.
English Summary
Coimbatore car blast lone wolf style attack