மின்கட்டண உயர்வு || தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் - மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு.!
communiest party protest announce for electricity bill increase
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். இந்தக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் குறியீட்டென் உயர்வுக்கு தகுந்தாற்போல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்திடக் கோரியும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதியமின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட கோரியும், அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைத்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கலுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம், மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25.07.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சிபிஐ (எம்) முடிவு செய்துள்ளது.
மக்கள் நலனை முன்வைத்து நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக அனைத்து தரப்பு பொதுமக்களும், வணிகர்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
communiest party protest announce for electricity bill increase