கிருஷ்ணகிரியில் மீண்டும் வெடி விபத்து.. ஆய்வுக்கு சென்ற 2 தாசில்தார்களின் நிலை என்ன?
Crackers explosion happened while tahsildar inspecting
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜே.காரப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் 7 சிறப்பு குழுக்களை அமைத்து பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது
அதன் அடிப்படையில் ஓசூர் நிலவரித் திட்ட சிறப்பு ஆர்டிஓ பாலாஜி, நிலவரி திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜே.காரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு குடோனை இன்று ஆய்வு செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் நிலவரித் திட்ட சிறப்பு ஆர்டிஓ பாலாஜி, சிறப்பு திட்ட தாசில்தார் முத்துப்பாண்டி, கேரளாவைச் சேர்ந்த பட்டாசு குடோன் மேலாளர் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் பட்டாசு குடோன் மேலாளருக்கு 80 சதவீதமும், நிலவரித் திட்ட சிறப்பு ஆர்டிஓ பாலாஜிக்கு 20 சதவீதமும், நிலவரி திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டிக்கு வலது கையில் தீக்காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் நிலவரித் திட்ட சிறப்பு ஆர்டிஓ பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு வெடி விபத்து குறித்தான விவரங்களை கேட்டு அறிந்தனர். மேலும் வெடி விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Crackers explosion happened while tahsildar inspecting