ரெட் அலெர்ட்: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Cuddalore school college leave
நாளை அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக
புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளை 29-11-2024: கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2024: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Cuddalore school college leave