கன்னியாகுமரியில் ரயில் நிலையத்தில் பயணிகளைத் துரத்தும் நாய்கள்..! - Seithipunal
Seithipunal


ரெயில்வே துறை இந்தியாவில் மிகப்பெரிய துறையாக விளங்குகிறது. இந்த ரெயில்வே துறையின் மூலமாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில் போக்குவரத்து மட்டும் தான் நீண்டதூர பயணங்களுக்கு முதுகெலும்பாய் திகழ்கிறது. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், ரெயில்வே துறை இந்தியா முழுவதும் ரெயில் நிலையங்களை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் கட்டமாக 50 ரெயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படவுள்ளது. 

அதற்காக, தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், காட்பாடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கன்னியாகுமரிக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். இதில் கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரெயில் மூலமாகவே வந்து சொல்கிறார்கள். 

இதன் காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை, பெங்களூரு, ஹிம்சாகர், ஹவுரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கன்னியாகுமரி ரெயில் நிலையம் இந்தியாவில் மேம்படுத்தப்பட உள்ள ரெயில் நிலையங்களில் ஒன்றாக தேர்வாகி உள்ள நிலையில், கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.67 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த ரெயில் நிலையத்தின் முகப்பில் விவேகானந்தர் நினைவு மண்டபம் போல் வடிவமைக்கப்பட்டு அழகுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கவில்லை. கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு மேற்கூரையும் போடப்பட்டுள்ளது ஆனால் ஏற்கெனவே உள்ள பிளாட்பாரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மேற்கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதுமட்டுமின்றி, கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் பயணிகள் மத்தியில் நாய்கள் அங்கு இங்கும் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் நாய்கள் பயணிகளை கடிக்க துரத்துவதையும் காண முடிகிறது. 

இதன் காரணமாக ரெயில்வே நிர்வாகம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைத்து மழை மற்றும் வெயில் பாதிப்பில் இருந்து பயணிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் நாய்தொல்லைகளையும் அடியோடு அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dogs chasing passengers Kanyakumari railway station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->