எதிரிகளிடமும் கருணை காட்ட வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., கிறித்துமஸ் வாழ்த்து.!
Dr Anbumani Ramadoss Wish Christmas 2021
முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., இன்று விடுத்துள்ள கிறித்துமஸ் வாழ்த்துச் செய்தியில், "எதிரிகளிடமும் கருணை காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த நாளை கிறித்துமஸ் விழாவாகக் கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.
இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதை உலகில் நிகழும் பல நடப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த நிலை மாற வேண்டுமானால் இயேசுபிரான் போதித்த கொள்கைகள் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம் பரப்பப்பட வேண்டும். இயேசுவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கு சிறந்த முன்னுதாரணங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவையே கர்த்தருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.
இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., கிறித்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Anbumani Ramadoss Wish Christmas 2021