சட்டவிரோத பார்களை ஒழிக்க "ஆளுநர் மாளிகை" நோக்கி பேரணி.. டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு..!!
Dr Krishnaswamy announces rally to governor house to eradicate illegal bars
மே 10ஆம் தேதி சென்னையில் பூரண மது ஒழிப்பு / சட்டவிரோக பார்களை அறவே ஒழித்திட வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புறந்தோற்றத்திற்கு தமிழ் சமுதாயம் வளர்ச்சி பெற்றது போன்று தோன்றினாலும், உள்ளடக்கத்தில் மது, போதை, புகை ஆகிய பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டு மிகப்பெரிய சீரழிவை நோக்கிச் செல்கிறது. குறிப்பிட்ட வயதை கடந்த ஒரு சிலரிடத்தில் மட்டும் இருந்த இதுபோன்ற பழக்கவழக்கங்கள் கல்லூரி, பள்ளி வாயில்கள் வரை பரவி ஒட்டுமொத்த சமுதாயத்திலும் வியாபித்து இருக்கிறது.
இக்கொடிய மது, புகை, போதை பழக்கவழக்கங்களுக்கு ஆட்பட்டவர்களுடைய உடல்நலம் சீரழிவதோடு, அவர்கள் சமூகத்தில் சிந்திக்க மற்றும் செயல்படத் திறனற்றவர்களாக மாறி சமூகத்திற்கு பெரும் சுமையாக மாறுகிறார்கள். டாஸ்மாக்கில் துவங்கி இப்பொழுது கஞ்சா விற்பனை வரையிலும் பட்டிதொட்டி எல்லாம் பரவி விட்டது.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்கள். தமிழகத்தில் சட்டப்பூர்வமாக 5500 டாஸ்மாக் கடைகள் உள்ளன. எவ்வித அனுமதியும் இன்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் ஐந்து முதல் பத்து பார்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த சட்டவிரோத பார்களில் விற்பனைக்கு எந்த கால வரையறையும் இல்லை.
இரவு பகல் பாராது 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது. துவக்கத்தில் இந்த பார்கள் மூலமாக அரசுக்கு ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது அப்பார்களிலிருந்தும் எவ்வித கட்டணமும் அரசு கஜானாவிற்கு செல்வதில்லை. மாறாக சட்டவிரோத பார்களில் தினமும் 50 முதல் 100 கோடி வரையும் அரசியல் அதிகார மிக்கவர்களின் தனிப்பட்ட கஜானாவை நிரப்புகின்றன என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே, உடனடியாக அனைத்து பார்களையும் மூடிடவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டம் நடத்திட புதிய தமிழகம் கட்சி முடிவெடுத்துள்ளது. அதன்படி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், சட்டவிரோத பார்கள் அனைத்தையும் மூடிடவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணிகளும் 100 இடங்களில் பொதுக் கூட்டங்களும் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.
இதன் துவக்கமாக, மே 10 ஆம் தேதி (புதன்கிழமை) சென்னை பனகல் மாளிகையில் காலை 11 மணிக்கு பேரணியாக துவங்கி, ஆளுநர் மாளிகை நோக்கி சென்று 12 மணி அளவில் ஆளுநர் அவர்களிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
எனவே, இந்த பேரணியில் புதிய தமிழகம் கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலுப்பெறச் செய்யுமாறுக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Krishnaswamy announces rally to governor house to eradicate illegal bars