ஒரு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட போக்ஸோ பாலியல் குற்றங்கள் - அதிரவைக்கும் புள்ளி விவரம் - டாக்டர் இராமதாஸ் வைக்கும் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ  நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக சிறப்பு போக்சோ  நீதிமன்றங்கள் போதிய எண்ணிக்கையில்  ஏற்படுத்தப்படாதது ஏமாற்றமளிக்கிறது; பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க இது உதவாது!

ஒரு மாவட்டத்தில் 300-க்கும் கூடுதலான  ’குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்’ குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ  நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.

தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக  தண்டிக்கப்பட வேண்டும்; அப்போது தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாக  சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் சி்றப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது சரியல்ல. இது குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  பெருகுவதற்கும் மட்டுமே  வகை செய்யும்!

தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும்; குற்றம் செய்தவர்கள்  உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Pocso Case Court Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->