ட்ரோன் மூலம் கொசு மருந்து! சென்னை மாநகராட்சி புதிய முயற்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் இயந்திரங்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட, பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு,

சென்னை மாநகராட்சியின் சார்பில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தப் பணிகளில் 3,463 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள், 251 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், 371  பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 129 விசைத்தெளிப்பான்கள் மூலம்  கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றும்,

நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பொழுது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு வான்வழி வாகன கழகத்துடன் இணைந்து சோதனை முறையில் ட்ரோன் இயந்திரங்களை பயன்படுத்தி கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

தற்சமயம்  மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு கொசுக்கள் இருப்பதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு நீர்வழிக் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

சென்னையில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் போன்ற கால்வாய்கள் மற்றும் 31 சிறிய கால்வாய்களில் இந்த ட்ரோன் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் 113 கி.மீ. தூரத்திற்கு கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த ட்ரோன் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் குறைவான கொசுப்புழு கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் தெளிக்கவும், மனித ஆற்றல் பயன்படுத்த முடியாத இடத்திலும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இயலும் எனவும் அமைச்சர் கெ.என். நேரு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் டாக்டர் எஸ்.மனிஷ், (சுகாதாரம்) அவர்கள், திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், (தெற்கு வட்டாரம்) அவர்கள், திரு.ஷேக் அப்துல் ரஹ்மான், (மத்திய வட்டாரம்) அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் மற்றும் மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drone Spray Mosquitoes medicine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->