அமலாக்கத்துறை சோதனை எதிரொலி! தலைமை செயலகத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!
ED Raid issue Chennai TN Govt Secretary Offife full police protection
இன்று காலை 7 மணி முதல் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கௌதம் சிகாமணி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள அமைச்சரின் வீட்டில் ஐந்துக்கும் அதிகமான அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அமைச்சருக்கு சொந்தமான விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடியின் மகன் திமுக எம்பி கௌதம் சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடி மீது கடந்த 2012ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன.
உள்ளே வருபவர்கள் யார்? அவர்களின் விவரம் என்ன? என்பது குறித்த விவரங்கள் கேட்ட பின்பு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
இந்த முறை பொன்முடியின் சோதனை விவகாரத்தில் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்றும், அப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகு தலைமைச் செயலகத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
English Summary
ED Raid issue Chennai TN Govt Secretary Offife full police protection